* முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும். * முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழை பேசட்டும். என் மனம் உன்னை மட்டும் சிந்திக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருள வேண்டும். * மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த மாவீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞான பண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக. * முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக. * எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்க பன்னிரண்டு கைககளுடன் வந்தருள்வாயாக. * ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடியிருக்கும் குமரனே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் வாழ்வளித்த புண்ணியமூர்த்தியே! எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக. * திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரக தோஷம் எதுவும் தாக்காமல் காத்தருள்வாயாக. * மலைக்குத் தெய்வமான குறிஞ்சி நாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்க. * கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குரு நாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக. * தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட விரைபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும் வழித்துணையாக வருவாயாக. * சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுவோருக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரை சேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் நலமுடன் வாழ வரம் தர வேண்டும்.