திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, சண்டேசுவர நாயனார் குருபூஜை நடந்தது.
சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட, 63 நாயன்மார்களில் ஒருவர் சண்டேசுவர நாயனார். இவரது இயற்பெயர் விசாரசருமா. இவர், சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து லிங்கபூஜை செய்து வந்தார். இவரது தந்தை சிவபூஜைக்கு இடையூறு செய்ததால், தந்தையை மழுவால் வெட்டினார்.அவரது தந்தையை மீட்டுத்தந்த சிவபெருமான், சிவபூஜையில் நெறிதவறாத விசாரசருமாவுக்கு, தன்னுடைய பூஜைக்குரிய பொருட்களுக்கு உரிய ஸ்ரீ சண்டிகேசுவர் என்ற பதவியை அளித்தார்.தைமாதம் உத்திர நட்சத்திரமான நேற்று, சண்டிகேசுவரர் குருபூஜை விழா நடந்தது. அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு திருக்கூட்டத்தினர், 63 நாயன்மார்களுக்கும், குருபூஜை நடத்தி வருகின்றனர். அதன்படி, ஸ்ரீ சண்டேசுவர நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.