பதிவு செய்த நாள்
03
பிப்
2021
02:02
ஈரோடு: கோவில்களில் அர்ச்சனை சீட்டு விற்பனை தொடங்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாத இறுதியில், அடுத்த மாதத்துக்கான தளர்வுகளை, அரசு அறிவிக்கிறது. இதில் பிப்., மாத தளர்வில், கோவில்களில் அர்ச்சனை டிக்கெட் விற்பனைக்கு அனுமதி கிடைக்குமா? என்று பக்தர்கள் மட்டுமின்றி, கோவில் அதிகாரிகளும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தளர்வு கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில், சென்னிமலை முருகன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், அந்தியூர் குருநாதசாமி கோவில், பாரியூர் காளியம்மன், ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்கள், அதிக பக்தர்கள் வருகை, வருவாய் கொண்டவையாக உள்ளன. பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நாள் ஒன்றுக்கு, 1,000 முதல், 1,500 அர்ச்சனை டிக்கெட் விற்பனையாகும். வெள்ளி, ஞாயிறு, அமாவாசை நாட்களில் அதிகமாகும். இதன் மூலம் மாதத்தில், 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ஈரோடு மாநகரில், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவில்களில், மாதத்துக்கு, 80 ஆயிரம் முதல், 90 ஆயிரம் ரூபாய் வரை அர்ச்சனை டிக்கெட் விற்பனையாகும். தற்போது தடை நீடிப்பதால், ஒவ்வொரு கோவிலுக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 1,300 கோவிலில்கள் உள்ளன. இந்த வகையில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த பத்து மாதமாக அரசு கோவில்களில் அர்ச்சனை டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், வருமானம் இல்லாமல் போயுள்ளது. தியேட்டர் மற்றும் சமுதாய நிகழ்வுகளுக்கு தளர்வு அதிகமாக்கப்பட்டுள்ளது. எனவே, கோவில்களிலும் அர்ச்சனை டிக்கெட் விற்க அனுமதிக்கலாம். இதனால் கோவிலுக்கு வருமானம் மட்டுமின்றி, பக்தர்களும் அர்ச்சனை செய்த திருப்தி அடைவர். பக்தர்களும் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.