பதிவு செய்த நாள்
04
பிப்
2021
07:02
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் மலைக்கோயிலில் நேற்றிரவு தங்கி வழிப்பட்டனர்.
தைப்பூச விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பருவத ராஜகுல சமுதாயத்தினர் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக பழநி முருகன் கோயிலுக்கு வருகின்றனர். அவர்கள் மலைக்கோயிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு வழிபாட்டிற்காக இளநீர், பால், புஷ்பம், சர்க்கரை காவடி எடுத்து, ஆட்டம் பாட்டத்துடன் பழநிக்கு நேற்று வந்தனர். அவர்களை பெரியநாயகியம்மன் கோயில் முன் யானை கஸ்துாரி வரவேற்றது. பின்னர் காவடிக்கு சிறப்பு பூஜை செய்து மலைக்கோயில் சென்றனர். சாயராட்சை கட்டளை பூஜை, ராஜ அலங்காரம், ராக்கால கட்டளை பூஜையில் சுவாமி தரிசனம் செய்தனர். பூக்களால் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அலங்காரம் செய்தனர். நேற்றிரவு முழுவதும் மலைக்கோயிலில் தங்கினர். பருவதராஜகுல சமுதாய மக்கள் மட்டும் தங்கி வழிபட அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.