பதிவு செய்த நாள்
06
பிப்
2021
02:02
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, கோவில் கதவை உடைத்து, ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மற்றும் நகைகளை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூர் பஸ் நிறுத்தம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில் உள்ளது. கோவில் தர்மகர்த்தா பாலசுப்ரமணியன், 61, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் கோவிலை பூட்டிச் சென்றார்.நேற்று காலை, 6:00 மணியளவில் கோவிலை திறந்து பார்த்தபோது, மூலவர் சன்னிதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே, மூலவர் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி அணிந்திருந்த, 2 சவரன் தாலி, 250 கிராம் வெள்ளி பொருட்கள், 1.5 அடி உயரம், 25 கிலோ எடையுள்ள ஐம்பொன் ஆஞ்சநேயர் உற்சவர் சிலை ஆகியவை திருடு போயிருந்தன. பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர். விரல் ரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விருத்தாசலம் டி.எஸ்.பி., மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிலை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.