பதிவு செய்த நாள்
12
பிப்
2021
12:02
தேவிபட்டினம் : தை அமாவாசையை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.அதிகாலை முதல் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் அதிகளவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக கடலுக்குள் உள்ள நவகிரகங்களை பக்தர்கள் சுற்றிவர அனுமதிக்கப்படவில்லை. நடை மேடையில் நின்றவண்ணம் பக்தர்கள் நவகிரகங்களை தரிசனம் செய்தனர். அறநிலைய துறை உதவி ஆணையர் சிவலிங்கம், தக்கார் நாகராஜன், எழுத்தர் தங்கவேலு உள்ளிட்ட அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தனர்.
சேதுக்கரை: தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை கடலில் பக்தர்கள் புனித நீராடினார்கள். ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய சேதுக்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜையினை அங்குள்ள புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டனர்.பின்னர் சேதுக்கரை கடலில் புனித நீராடி அருகே உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்தனர். சேதுக்கரை சீனிவாசப் பெருமாள் கோயில், வெள்ளைப்பிள்ளையார், அகத்தியர்கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு ஊர் திரும்பினர்.சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சேதுக்கரையில் நேற்று அதிகாலை 3:00 மணி முதல் பிற்பகல் வரை புனித நீராடினர். திருப்புல்லாணி, சேதுக்கரை ஊராட்சியின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று அதிகாலை முதல் பாலாபிஷேகம் நடந்தது. மாரியூர் கடலில் நீராடிவிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடினர். ஏற்பாடுகளை மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்துஇருந்தனர்.
திருவாடானை: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.ராமபிரான், சீதையை மீட்கும் பொருட்டு இவ் வழியே சென்ற போது இங்கு இளைப்பாறினார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உருவாக்கி கொடுத்ததால் சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக ஸ்தல வரலாறு உள்ளது.இங்குள்ள கடலில் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். நேற்று ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.