ராமேஸ்வரம்:தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
தை அமாவாசையான நேற்று ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி ராமர், சீதை, லட்சுமணர் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். கோயில் குருக்கள் ராமருக்கு மகா தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்திடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள், புரோகிதர்கள் மூலம் திதி, தர்பண பூஜை செய்தனர். சிவ சிவ கோஷத்துடன் கடலில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடினர்.
குவிந்த பக்தர்கள்: நேற்று கோயிலுக்குள் புனித நீராட 2 ஆயிரத்துக்கும் மேலான வாகனத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வாகனங்கள் ராமேஸ்வரம், மதுரை மற்றும் தனுஷ்கோடி தேசிய சாலையோரத்தில் 2 கி.மீ., துாரம் நின்றது. நேற்று காலை 5:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை புனித நீராட பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். மதுரை, ராமேஸ்வரம் சிறப்பு ரயிலால் ஏராளமான பக்தர்கள் பயனடைந்தனர்.