சென்னையில் பத்மாவதி தாயாருக்கு கோயில் பூமி பூஜையில் விஜயேந்திரர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2021 04:02
சென்னை:திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார்.
பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவருக்கு சொந்தமான ஆறு கிரவுண்டு இடம் தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் இருந்தது. அதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கினார்.அந்த இடத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் பத்மாவதி தாயாருக்கு மன்னர்கால முறையில் கற்களை கொண்டு கோயில் கட்டப்படுகிறது.திருச்சானுாரில் இருப்பது போன்று பத்மாவதி தாயார் சிலை இக்கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கோயில் கட்டுமான பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜையை துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்.அவர் பேசியதாவது:திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பல்வேறு தர்ம காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திருமலைக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் தங்குவதற்கு மண்டபங்கள் கட்டி தந்து உள்ளது. கோயில்களுக்கு பசுவும், கன்றும் தானமாக வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டு உள்ளது. ஹிந்து தர்மத்தை பல இடங்களில் கொண்டு சேர்க்க கோ பூஜை நடத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்.திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி பேசுகையில் சென்னையில் பத்மாவதி தாயார் கோயிலை அடுத்து கள்ளக்குறிச்சியில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்ட பூமி பூஜை பிப்.22ல் நடக்கிறது என்றார்.நடிகை காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.