பதிவு செய்த நாள்
14
பிப்
2021
08:02
சூரத் : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு இதுவரை, 1,511 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது என, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவ் கிரி கூறியதாவது : ராமர் கோவில் கட்டும் திருப்பணிக்கு நன்கொடை திரட்டும் பணி, ஜன., 15ல் துவங்கியது. இந்தியா முழுதும் ஏராளமானோர், தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். இதுவரை, 1,511 கோடி ரூபாய் நன்கொடை வசூலாகியுள்ளது. நாடு முழுதும், நான்கு லட்சம் கிராமங்கள் மற்றும் 11 கோடி குடும்பங்களிடம், நன்கொடை திரட்ட திட்டமிட்டுள்ளோம். வரும், 27ம் தேதி வரை நன்கொடை திரட்டப்படும். 492 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான், நன்கொடை மூலம், அயோத்தி ராமர் கோவிலின் திருப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பு, மக்களுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.