பதிவு செய்த நாள்
04
ஜூன்
2012
11:06
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வரர் உடனமர் விசாலாட்சி அம்மன் கோவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது; நம சிவாய கோஷம் முழங்க, பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேரோட்ட விழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை, விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் மற்றும் முருகப்பெருமாள் அமர்ந்த தேர் வீதி உலா வந்தது. மாலை 4.14 மணிக்கு, கலெக்டர் மதிவாணன், பயிற்சி எஸ்.பி., விக்ரமன் உள்ளிட்டோர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.மகளிர் பங்கேற்ற சப்த வர்ண சிங்காரி மேளம், நாதஸ்வர மேள இன்னிசையுடன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சூலதேவர் அமர்ந்த சிறிய தேர் முன்னே செல்ல, சோமஸ்கந்தர் தேர், மக்கள் வெள்ளத்தில் நகர்ந்து சென்றது. ஈஸ்வரன் கோவில் தெற்கு வாசலை அடைந்ததும், கோவிலுக்குள் இருந்து வந்த அமுது படைக்கப்பட்டது. சரியாக 5.00 மணி அளவில், கே.எஸ்.சி., பள்ளி ரோடு, அரிசிக்கடை வீதி சந்திப்பை வந்தடைந்தது. அகலமான அந்த ரோட்டில், வேகமாக செல்லக்கூடும் என்பதால், தேர்வடத்தின் அளவு குறைக்கப்பட்டது. வீரராகவப் பெருமாள் கோவில் சந்திப்பு அருகே, மீண்டும் தேர்வடத்தின் நீளம் அதிகரிக்கப்பட்டது. பூ மார்க்கெட் அருகே சென்றபோது, வியாபாரிகள் கூடை கூடையாக மலர்களை எடுத்து வந்து, தேரின் மீது தூவி வணங்கினர். பக்தர்கள் தாகம் தணிக்க, நீர்மோர், பழரசம் ஆங்காங்கே வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் திருஞானசம்பந்தர் அடியார்கள் கூட்டம், ருத்ராட்ச மாலை தரித்து, தேருக்கு முன்பாக நடனமாடியபடி சென்றனர். மாலை 6.20 மணிக்கு தேர் நிலையை அடைந்து, மகா தீபாராதனை நடந்தது. இன்று பிற்பகல் 3.00 மணி அளவில், சீதேவி பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.மூன்று சோதனைகள் தேரோட்டத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக, அரிசிக்கடை வீதியில் மரக்கிளைகள் வெட்டப்பட்டன. ஆனால், மூன்று இடங்களில் குறுக்கே சென்ற, ஒயர்களை கவனிக்கத் தவறிவிட்டனர்.
அரிசிக்கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி சந்திப்பில் கேபிள் குறுக்கே சென்றதால், 10 நிமிடம் தேர் நின்றது; ஒயரை துண்டித்த பிறகே தேர் நகர்ந்தது. அடுத்ததாக, பூ மார்க்கெட் அருகே குறுக்காக சென்ற ஒயராலும், ஆளும்கட்சியினர் வைத்திருந்த மெகா சைஸ் பிளக்ஸ் பேனராலும், தேரை நகர்த்துவதில் மீண்டும் சோதனை ஏற்பட்டது. அப்பகுதியில் இடையூறாக இருந்த, தெற்கு போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பலகை அகற்றப்பட்டது. இறுதியாக, தேர் நிலையை அடைவதற்கு சில அடி தூரத்துக்கு முன்பாக, குறுக்கே சென்ற கேபிள் ஒயர், தேர்கலசத்துக்கு மேல் இருந்த சிறிய குடையில் சிக்கியது. இதனால், தேர் நகர்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது; கலசங்கள் சாய்ந்து விடுமோ என்று பக்தர்கள் அஞ்சினர். போலீசார் விரைந்து செயல்பட்டு, பெரிய மரக்குச்சி மூலமாக, ஒயரை தூக்கி, தேர் செல்ல வழி ஏற்படுத்தினர். மூன்று இடங்களில் சோதனைகளை சந்தித்த தேர், பக்தர்களின் ஆரவார கோஷத்துடன் நிலையை அடைந்தது.