பதிவு செய்த நாள்
28
பிப்
2021
11:02
சென்னை : கோயில்களை பக்தர்களிடம் விடுங்கள், தமிழக கோயில்களை விடுவிக்கும் நேரமிது என சத்குரு பேசியது சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது. இதனால் இந்து கோயில்களை விடுவியுங்கள் என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கடந்த இரு தினங்களாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதை முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்துக்கு, டேக் செய்துள்ளார்.
டுவிட்டரில் அவரின் பதிவு : 11,999 கோயில்கள் ஒரு கால பூஜை கூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோயில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோயில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோயில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. தமிழ்நாட்டில் கோயில்கள் தான் தமிழ் சமூகத்தின் ஆன்மா. நகரங்கள், கோயில்களை பிரதான அம்சமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டன. இன்று அரசு பிடியில் ஆன்மாக்கள் உள்ளன - படிப்படியாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட வீடியோவில், 300 ஆண்டுகளுக்கு முன், கிழக்கிந்திய கம்பெனி கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது. கோயில் சொத்துக்களை களவாடுவதற்காகவே கைப்பற்றப்பட்டது. சுதந்திரம் பெற்று, 74 ஆண்டுகளுக்கு பின்பும், அதே நிலையில் உள்ளது. ஸ்லோ பாய்சன் போன்று, மெல்ல மெல்ல கோயில்களை அழித்து சாகடிக்கின்றனர். கோயில்கள் பக்தர்கள் கையில் இருந்தால், தங்கள் உயிரே போனாலும், அதை பத்திரமாக பார்த்து கொள்வார்கள்.
உலகில் இருக்கும் எல்லா மதங்களும் நம் நாட்டில் கலந்துள்ளது. மற்றவர்களுக்கு சுதந்திரம் இருக்கும்போது, நம் கோயில்களுக்கு மட்டும் அடிமைத்தனம் உள்ளது. இதை நாம் மாற்றியாக வேண்டும். நம் நாட்டை, மதச்சார்பற்ற நாடு என்கிறோம். அதன் அர்த்தம், மதத்தில் அரசு தலையிட கூடாது என்பது தான். இந்த தலைமுறையில், நாம் கோவில்களை பாதுகாக்காவிட்டால், அடுத்த, 50 - 100 ஆண்டுகளில் கோயில்களே இல்லாமல் போய்விடும். நம் கலாசாரத்துக்கு மூலமாகவும், உயிர்நாடியாகவும் இருக்கும் கோயில்கள் முற்றிலும் அழிந்துவிடும். தமிழக கோயில்கள், அரசின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும். இவ்வாறு, சத்குரு கூறியுள்ளார். சத்குருவின் இந்த பதிவு மற்றும் வீடியோவிற்கு சமூகவலைதளமான டுவிட்டரில் வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் சந்தானமும், சந்குருவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இவரைப்போன்று பலரும் அவரது கருத்தை வரவேற்றுள்ளனர். இதனால் டுவிட்டரில் #FreeHinduTemples என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்...
ஏன் இந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு இதுபோன்று இல்லையே. இந்து கோயில்கள் என்ன அரசுக்கான பண வங்கியா?
எங்கள் உரிமை எங்களுக்கு வேண்டும். எல்லாவற்றிலும் சமத்துவம் வேண்டும்.
இந்து கோயில்கள் வணிக ரீதியாக மாறிவிட்டது. நுழைவுக்கு கட்டணம், பார்க்கிங் கட்டணம், தரிசனத்திற்கு கட்டணம், பிரசாதம், அர்ச்சனை இப்படி இன்னும் பல....
பிரதமர் மோடி அவர்களே... தயவு செய்து இந்து கோயில்களை அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும். சில அரசாங்கங்கள் தங்கள் சொந்த நலன்களை நிறைவேற்ற இந்த கோயில் நிதியைப் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வரை தினமும் இதுப்பற்றி டுவீட் செய்வேன். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்து சமூகம் மட்டுமே இந்த போன்ற சிக்கல்களை சந்திக்கின்றன. இது பாரபட்சமானது. இது மதச்சார்பின்மை என்ற கருத்தை மீறுகிறது. மேலும், மத அமைப்புகளை அரசு நடத்த இந்திய அரசியலமைப்பு அனுமதிக்காது. இந்து மத கோயில்களை மட்டுமே அரசாங்கங்கள் ஏன் கட்டுப்படுத்துகின்றன.
ஒரு மதச்சார்பற்ற அரசு என்றால், மதங்களின் விவகாரங்களில் தலையிட கூடாது. இந்து கோயில்கள் நிரந்தரமாக பால் கறக்கும்(பணம்) பசுக்கள் அல்ல. அவற்றை பக்தர்களிடம் ஒப்படைக்கவும். இந்தியாவில் மட்டும் ஏன் கோயில்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது புரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இப்படித்தான் இருக்கிறது. எல்லா மத நிறுவனங்களையும் கட்டுப்படுத்தவும். இந்துக்களை மட்டும் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? கோயில் என்பது அரசாங்கத்தின் பண இருப்பு என்று அர்த்தமல்ல. இதுபோன்று பலரும் தங்களது கருத்தை #FreeHinduTemples, #FreeTNTemples போன்ற ஹேஷ்டாக்குகள் மூலம் டுவிட்டரில் பதிவிட்டு டிரண்ட் செய்கின்றனர்.