பதிவு செய்த நாள்
08
மார்
2021
03:03
அன்னூர்: ஈஷா யோக மையத்தின் தென் கயிலாய பாதயாத்திரை ரதம் அன்னூர் வந்தது. கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில், ஈஷா யோக மையம் செயல்படுகிறது. இங்கு வருகிற 11ம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி விழா குறித்து மக்களிடம் தெரிவிக்கவும், ஆதியோகி சிவனையும், 63 நாயன்மார்களையும் அனைத்துப் பகுதிக்கும் கொண்டு செல்ல, சிவாங்கர்கள் சார்பில், தென்கயிலாய பாதயாத்திரை ரதம் கடந்த பிப். 15ம் தேதி, சென்னை, கூடுவாஞ்சேரியில், துவங்கியது.
இந்த பாதயாத்திரை, செங்கல்பட்டு, வந்தவாசி, திருச்செங்கோடு, கோபிசெட்டி வழியாக நேற்று முன்தினம் இரவு அன்னூர் வந்தது. அன்னூர், சத்தி ரோட்டில், ஈஷா யோக மைய தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்பளித்தனர். இதையடுத்து, குமாரபாளையம், காலனியில், சிறப்பு வழிபாடு நடந்தது. ரதத்துடன் பாதயாத்திரையாக வந்த சிவாங்கர்கள் கூறுகையில், மகா சிவராத்திரியன்று கண்விழித்து யோகத்தில் ஈடுபட்டால், அதிக பலன்கள் கிடைக்கும். ஈசா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் இதில் பங்கேற்கலாம். பாதயாத்திரையின் வழிநெடுக பல ஆயிரம் பக்தர்கள், ஆதியோகியையும், 63 நாயன்மார்களையும் வழிபட்டு மகிழ்ந்தனர் என்றனர். இதையடுத்து ரதம் சென்னப்ப செட்டி புதூர், சரவணம்பட்டி வழியாக கோவை நகருக்கு சென்றது. 9ம் தேதி பேரூர் வழியாக ஈஷா யோக மையம் சென்றடைய உள்ளது. இந்த பாதயாத்திரை, 22 நாட்களில், 520 கி.மீ., தூரம் நடக்கிறது.