பதிவு செய்த நாள்
09
மார்
2021
10:03
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 11ல் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில், லட்சார்ச்சனை, லட்சம் தீபம் ஏற்றப்படாது என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாசி மாத அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன் வரும், திரியோதசி மற்றும் சதுர்த்தசி சந்திக்கும் நாட்களில், மஹா சிவராத்திரி விழா நடக்கும். வரும், 11ல், மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. வழக்கமாக அந்நாளில்,அருணாசலேஸ்வரர் கோவிலில், காலை, 8:00 முதல், 12:00 மணி வரை லட்சம் அர்ச்சனையும் மற்றும் மாலை, 6:00 மணிக்கு லட்சம் தீபம் ஏற்றும் விழாவும் நடக்கும். தொடர்ந்து, இரவு முழுதும் நான்கு கால பூஜை நடத்தப்படும். நள்ளிரவில், லிங்கோத்பவருக்கு உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்களின் அபிஷேகம் நடக்கும். இந்த ஆண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கையால், லட்சார்ச்சனை, லட்சம் தீபம் நடக்காது. உபயதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் அபிஷேகம் தவிர்த்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அபிஷேகம் செய்யப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.