பதிவு செய்த நாள்
09
மார்
2021
10:03
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வரும், 18ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக, விழா ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு திருவிழா, வழக்கம்போல் கொண்டாடப்பட இருக்கிறது.விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 22ம் தேதி காலை, வெள்ளி அதிகார நந்தி சேவை, 23ல், காலை, அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீதியுலா, இரவு வெள்ளி தேர் உலா நடைபெறுகிறது. மறுநாள், 24 காலை தேர் திருவிழா நடைபெறுகிறது. 27ல், திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 28ம் தேதி காலை, 5:00 மணிக்கு தங்க இடபவாகனத்தில், ஏகாம்பரநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், 31ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.