பதிவு செய்த நாள்
14
மார்
2021
11:03
பெரம்பலுார், பெரம்பலுார் அருகே, ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.
பெரம்பலுார் மாவட்டம், பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, பெரம்பலுார் -துறையூர் சாலையில் பாளையம் மேம்பாலம் அருகே தோப்பு பகுதியில் உள்ள மயானத்துக்கு, கோவிலில் இருந்து அங்காளபரமேஸ்வரி சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக மதியம் ஒரு மணி அளவில் கொண்டுவரப்பட்டது. மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமி உருவத்துக்கு கீழ் கொட்டப்பட்டிருந்த அரிசி சாதத்தில் கிடா வெட்டி அதன் ரத்தத்தை கலந்தனர். பின்னர், அந்த சாதத்தை அள்ளி வீசினர். அந்த சோற்றை அங்கு திரண்டிருந்த பெண்கள் மடியேந்தி பெற்றுக்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்று ரத்த சோற்றை பெற்றால், குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தைப் பேறு, திருமணத்தடை உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம். குரும்பலுார், செஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அருள் வந்து சாமி ஆடியவர்களிடம் பக்தர்கள் கோழிகளை நேர்த்தி கடனாக செலுத்தினர். சாமியாடியவர்கள் கோழிகளை பெற்று அதன் ரத்தத்தை உறிஞ்சி குடித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான, ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.