பதிவு செய்த நாள்
16
மார்
2021
12:03
ஈரோடு: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்காக, ஆகம விதிகளை மீறி, கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., வேட்பாளராக, எம்.எல்.ஏ., ராமலிங்கம் போட்டியிடுகிறார். நேற்று மனு தாக்கல் செய்ய, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
முன்னதாக, மதியம், 1:30 மணிக்கு, ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள, பெரிய மாரியம்மன் கோவிலுக்கு தொண்டர்களுடன் சென்றார். தரிசனம், அர்ச்சனை செய்த பின், மனுவை சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டு கிளம்பிச் சென்றார்.கோவில் நடை நேற்று வழக்கம்போல், மதியம், 12:30மணிக்கு அடைக்கப்பட்டது. எம்.எல்.ஏ., ராமலிங்கம் வருகைக்காக, 1:20 மணிக்கு கோவில் கதவு மீண்டும் திறந்திருந்தது. இதையறிந்த பக்தர்கள், திர்ச்சி அடைந்துள்ளனர். கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தனிடம் கேட்டபோது, என் கவனத்துக்கு எதுவும் வரவில்லை, என்றார். பூட்டிய கோவில் நடையை திறக்க உடந்தையாக இருந்த, அறநிலைய துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.