பதிவு செய்த நாள்
16
மார்
2021
12:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கில் குடிநீர், அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான கார் பார்க் ஜெ.ஜெ., நகரில் உள்ளது. தினமும் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் தங்கள் வாகனங்களை, இந்த பார்க்கில் நிறுத்தி விட்டு கோயிலுக்கு செல்கின்றனர்.
7 ஆண்டுக்கு முன்பு துவக்கிய இந்த பார்க்கில் குடிநீர், கழிப்பறை, ஓய்வு கூடம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் இருந்தது. மேலும் வாகனத்தில் உள்ள பொருட்களை திருடுவதை தடுக்க 10 க்கு மேலான சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. துவக்கத்தில் குடிநீர், கழிப்பறை கூடத்தை பராமரித்த நிலையில், காலப்போக்கில் கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டது. இதனால் பார்க்கில் குடிநீர், கழிப்பறையில் தண்ணீர் இன்றியும், சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி முடங்கிக் கிடக்கிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றாமல் உள்ளதால், கார் பார்க் சுகாதாரக்கேடு நிறைந்து கிடக்கிறது. வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி குடிநீர், கழிப்பறை வசதியை மேம்படுத்திட இந்து அறநிலைதுறை போர்க்கால நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.