அவள் ஓர் எளிய பூக்காரி. காமாட்சி என்பது அவளின் பெயர். காஞ்சி மகாபெரியவரின் பக்தையான அவள் அவரை ‘அப்பா’ என்றே அழைப்பது வழக்கம். தினமும் பூவால் மகாபெரியவரை அர்ச்சிப்பாள் அவள்.
அவள் செயல்களைப் பார்த்து சுவாமிகள் சிரிப்பார். ‘பூக்களை விற்றால் பணம் கிடைக்குமே?’’ எனக் கனிவுடன் கேட்பார்.
‘சுவாமிகளின் அருள் இருந்தால் எல்லாமே கிடைக்கும்’’ என பதில் சொல்வாள். பூக்கூடை காலியான பிறகு அதை எடுத்துக்கொண்டு புறப்படுவாள். அப்போது காலிக் கூடையில் ஏதாவது பழமோ, புஷ்பமோ கொடுத்து அனுப்புவது வழக்கம். அதைக் கண்ணில் ஒற்றிக் கொள்வாள்.
நாள்தோறும் வியாபாரத்தை முடித்துக் கொண்ட பின் தான், தன்னை வந்து தரிசிக்க வேண்டும் என்று மகாபெரியவர் சொல்லியிருந்தார். அதன்படி மாலை (அ) முன்னிரவு நேரத்தில் தரிசிக்க வருவாள். ஒவ்வொரு நாளும் மலர் அர்ச்சனை நடக்கும். எத்தனையோ ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது இது.
அவளுடைய பக்தியை அறிந்திருந்த மகாபெரியவர், அவள் வீட்டுத் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை மடத்தின் மூலமாக அனுப்புவதுண்டு. சபரிக்கு ராமபிரான் மீதிருந்தது போன்ற பக்தி அவளுடையது. மகாபெரியவர் நுாறு வயது நெருங்கிய போது ஸித்தி அடைந்தார். அவள் மனம் துயரத்தில் ஆழ்ந்தது. மெல்ல மெல்லத் தன்னைத் தேற்றிக் கொண்டாள். மகாபெரியவர் அருள் தொடர்ந்து துணையிருக்கும் என திடமாக நம்பினாள்.
சுவாமிகள் ஸித்தியான பின்னரும் மலர் அர்ச்சனையை நிறுத்தவில்லை. மகாபெரியவரின் சமாதியை தினமும் இரவு பூக்களால் அர்ச்சிக்கத் தொடங்கினாள். ஆனால் இப்போது ஒரு வித்தியாசம். சுவாமிகள் இருந்த போது கூடையில் பூவோ, பழமோ பிரசாதமாகப் அனுப்புவார். இப்போது அது நடப்பதில்லையே? ஒருநாள் சமாதிக்கு அர்ச்சனை செய்தபின் வெறும் கூடையை வைத்தபடி புலம்பினாள்: ‘‘அப்பா! முன்பெல்லாம் என்னை வெறும் கூடையுடன் அனுப்ப மாட்டீர்களே? பழமோ பூவோ பிரசாதமாக கொடுப்பீர்களே?’’ இப்படி அவள் உருகிய போது திடீரென பலத்த காற்றடித்தது. சமாதியில் அர்ச்சிக்கப்பட்டிருந்த பூக்களிலிருந்து செம்பருத்திப் பூ ஒன்று பறந்து வந்து கூடையில் வந்து விழுந்தது.
மெய்சிலிர்த்த பூக்காரியி அதை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். ‘‘ அப்போதும், இப்போதும், எப்போதும் இருந்து அருள்புரிகிறீர்கள். உமது ஆசி கிடைத்தால் போதும் எனக்கு’’ என ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.