பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
பதிவு செய்த நாள்
25
மார் 2021 11:03
பேரூர்: பேரூரா பட்டீசா கோஷம் முழங்க, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக, இன்று(மார்ச் 25) மாலை நடந்தது. கோவை, பேரூர் பட்டீசுவரர் கோவில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, கடந்த, 19ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையடுத்து, சூரியபிரபை, சந்திரபிரபை திருவீதியுலா, 22ம் தேதி பஞ்சமூர்த்திகள், காமதேனு திருவீதியுலா நடந்தது. மறுநாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். நேற்று முன்தினம் மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் முடிந்து, வெள்ளை யானை சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. காலை, 9:30 மணிக்கு சுவாமி சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் தேரிகளில் எழுந்தருளினர். பக்தர்கள் திருத்தேர்களில் வீற்றிருந்த சுவாமிகளை தரிசித்தனர். திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு, மாலை 4:10 மணிக்கு நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் புடைசூழ பேரூரா பட்டீசா கோஷம் முழங்க, சிறுவாணி ரோடு, ரத வீதிகளின் வழியாக தேர்கள் வலம் வந்தன. பக்தர்கள் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர். சிறுவாணி ரோட்டில் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. வரும், 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் பங்குனி உத்திரவிழா நிறைவடைகிறது.
|