பதிவு செய்த நாள்
26
மார்
2021
10:03
திருப்பூர் :சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், அம்மையப்பரின் கைலாய காட்சியுடன், திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து நேற்று வழிபாடு நடந்தது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தரின் கனவில் வரும் கூறும் பொருட்களை, கோவிலில் உத்தரவு பெற்று, பெட்டியில் வைக்கப்படுகிறது. ஜன., மாதத்தில் இருந்து, நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை நடந்து வந்தது. தற்போது, முத்துாரை சேர்ந்த கோகுல்ராஜா என்பவர் கனவில் வந்த பொருட்களை, சிவன்மலை ஆண்டவரிடம் உத்தரவு பெற்று, பெட்டியில் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது.
உத்தரவு பெட்டியில், முருகன் மற்றும் விநாயகருடன், அம்மையப்பர் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் திருக்கைலாய காட்சி, தெய்வாம்சம் பொருந்திய அகத்தியரின் ஜாதகம், அகோர வீரபத்ரர், ஒரு திருமாங்கல்யம் மற்றும், 32 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை வைத்து, வழிபாடு நடத்தப்படுகிறது. சிவன்மலை கோவில், சிவாச்சார்யார்கள் கூறுகையில், உத்தரவு பெட்டியில், திருமாங்கல்யம் உள்ளிட்ட, மங்களகரமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தடைபட்டிருந்த திருமணங்கள் நடக்கும். கைலாய காட்சியுடன் கூடிய அம்மையப்பர் படம் வைக்கப்பட்டுள்ளதால், உலகத்தில் ஒற்றுமையும், அமைதியும் மேம்படும். நாணயங்கள் இடம் பெற்றதால், பொருளாதாரமும் வளம்பெறும். மொத்தத்தில், மங்களகரமாக இருக்கும் என்றனர்.