பதிவு செய்த நாள்
26
மார்
2021
10:03
டேராடூன்: உத்தரகண்டின் ஹரித்வாரில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முதல் முறையாக, கும்பமேளா திருவிழா, ஒரு மாதம் மட்டுமே நடக்கவுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த, 2010ம் ஆண்டு, கடைசியாக நடந்த விழாவில், ஜனவரி 14ம் தேதி துவங்கி, ஏப்ரல் 28ம் தேதி வரை நடந்தது. எனினும், இம்முறை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கும்பமேளா விழாவை, ஹரித்வாரில் ஒரு மாதம் மட்டுமே கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி துவங்கி, ஏப்ரல் 30ம் தேதி வரை, கும்பமேளா கொண்டாடப்படுகிறது. கும்பமேளா திருவிழா, ஒரு மாதம் மட்டுமே கொண்டாடப்படுவது, இதுவே முதன்முறை. இந்நிலையில், பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, கொரோனா வைரசால் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழை காண்பித்தால் மட்டுமே, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.