பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
10:04
திருப்பதி: திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தங்கும் அறையும் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில், தேவஸ்தான இணையதளத்தில், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
முன்பதிவு: திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.அதில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி பதிலளித்தார், நிகழ்ச்சி நிறைவுக்கு பின், அவர் கூறியதாவது.கிராம மக்கள் இடையே ஹிந்து தர்மத்தை போதிக்க, தேவஸ்தானம் புதிய நடவடிக்கைககளை மேற்கொள்ள உள்ளது. அதற்காக பஜனை மண்டலிகள், கோசாலை நிர்வாகிகள், விஷ்ணு சகஸ்ரநாமபாராயணம், லலிதா சகஸ்ரநாமபாராயணம் மண்டலிகள், ஸ்ரீவாரி சேவார்த்திகள் விவரங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் சேகரித்து வருகிறது.கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கி உள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்கள் முககவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக, திருமலையில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் முதலில், மத்திய விசாரணை அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து துணை விசாரணை அலுவலக்திற்கு சென்று, அறை பெற்றுக் கொள்ளும் முறை தற்போது அமலில் உள்ளது.
வசதிகள்: இதை எளிதாக்க, அறை முன்பதிவு செய்த பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடந்ததும், குறுந்தகவல் வாயிலாக, அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய துணை விசாரணை அலுவலக எண்கள், அவர்களது மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பப்படும். பக்தர்கள் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று, தங்கள் அறையை பெற்றுக் கொள்ளலாம். இம்முறை இன்னும், 10 நாட்களில் அமலுக்கு வர உள்ளது. மேலும், இணையதளம் வாயிலாக விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள், அதே பக்கத்தில் தங்கும் அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளும் விதம் இணைய தளத்தில் சில மாற்றங்களை, தேவஸ்தானம் செய்ய உள்ளது. விரைவில் இந்த வசதியும் அமலில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.