பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
05:04
கோவை:தமிழக கோவில்களை விடுவிக்க, 3 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதரவு உள்ளது. பக்தர்களிடம் கோவில்களை ஒப்படைக்க, உறுதிமொழியை வழங்க வேண்டும் என, முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.
கோவை, ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு, கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை துவக்கியுள்ளார். முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சத்குரு கூறியுள்ளதாவது:தமிழக கோவில்களை விடுவிக்க, 3 கோடிக்கும் அதிகமான மக்களின் குரல் ஒலித்திருக்கிறது. ஹிந்து வழிபாட்டுத் தலங்களை பக்தர்கள் நிர்வகிக்க, ஜனநாயக உரிமையை அரசு வழங்க வேண்டும். அதை வலியுறுத்தி, ஒருங்கிணைந்து குரல் எழுப்பியுள்ளனர்.கோவில்கள் ஆன்மிகத்துக்கும், கலாசாரத்துக்கும் மையப் புள்ளியாய் உள்ளன. கோவில்களை முழு ஆற்றலுடன் இயங்க செய்ய வேண்டும் என்பதே பக்தர்கள் விருப்பம். தமிழக மக்களின் இதயத்தில் உள்ள வலியை கணக்கெடுக்க முடியாது. அவர்களது வேதனையை புறக்கணிக்கக்கூடிய காலகட்டம் கடந்தோடி விட்டது. ஆன்மிக தலைவர்கள், பொதுமக்கள் ஆதரவு திரட்டி, உறுதிஉடன் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.மக்கள் விடுத்திருக்கும் கோரிக்கையை புறக்கணிக்கவோ, செவிமடுக்காமல் இருக்கவோ இயலாது என்பது என் எண்ணம். பக்தர்களிடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டிய உறுதிமொழியை வழங்க வேண்டும். அதன் வாயிலாக, வரலாற்றில் பெருமை பெற்றவர்களாக நினைவு கொள்ளப்படுவீர்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.