மானாமதுரை: திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால் ராட்டின தொழில் பாதித்துள்ளதாக தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை, மானாமதுரை, பரமக்குடி, தேனி, வீரபாண்டியில் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். இந்த விழாக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், ராட்டினம், சர்க்கஸ் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கும். இதை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதித்துள்ளனர். இதனால், ராட்டின தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து ராட்டின அமைப்பாளர் மூர்த்தி கூறியதாவது, ஒரு ஆண்டு தடைக்கு பின் சில மாதங்களாக தளர்வு ஏற்படுத்தினர். அதை வைத்து ராட்டினம் சுற்றி குடும்பத்தை நடத்தினோம். இந்நிலையில் மீண்டும் திருவிழாவிற்கு தடை விதிப்பால் தொழிலாளர்கள் தவிக்கின்றனர், என்றார்.