பதிவு செய்த நாள்
14
ஏப்
2021
03:04
ஹரித்துவார்: உத்தரகாண்டின் ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்க பெரும் திரளான பக்தர்கள் வந்துள்ளனர். கும்பமேளாவுக்கு வருவோர், கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டு வருமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.. ஆனால் அதனை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. பலரும் மாஸ்க் அணியாமல் சாலையில் உலா வருகின்றனர். சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் கங்கை நதியில் நீராடினர்.
புத்தாண்டு தினமான இன்று கங்கையில் புனித நீராட 6 லட்சம் பக்தர்கள் ஹரித்துவாரில் திரண்டுள்ளனர். சேட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலம் இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றின் 2 ஆம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், விதி முறைகளை காற்றில் பறக்க விட்டு ஹரித்துவாரில் பக்தர்கள் நடமாடுகின்றனர். சமூக இடைவெளியை கடை பிடிக்க வலியுறுத்தி, பலப்பிரயோகம் செய்தால் நெரிசல் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி சாமியார்களும்,, சமூக இடைவெளியை அலட்சியம் செய்து, நதியில் குளிப்பதும், மாஸ்க் இன்றி நடமாடுவதும் சுகாதார அதிகாரிகளை கவலை அடையச்செய்துள்ளது.