பதிவு செய்த நாள்
17
ஏப்
2021
03:04
மும்பை:மும்பை, புனே, நாசிக் நகரங்களில் உள்ள, ஜைன கோவில்களில் தயாரிக்கப்படும் உணவை, பக்தர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க, மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. விசாரணைஇங்குள்ள இரு ஜைன அறக்கட்டளைகள் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜைன மதத்தினர், நாளை மறுதினம் முதல், நவராத்திரி விழாவையொட்டி, விரதம் இருப்பது வழக்கம். அப்போது, மசாலா சேர்க்காத, வேக வைத்த குறிப்பிட்ட உணவை மட்டுமே உண்பர். இந்த உணவை, மும்பையில், 58 ஜைன கோவில்கள்,புனே மற்றும் நாசிக்கில் தலா மூன்று கோவில்கள் வினியோகிப்பது வழக்கம். தற்போது, கொரோனா கட்டுப்பாடுகளால், கோவில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், உணவுப் பொட்டலங்களை மட்டும் வினியோகிக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, எஸ்.சி.குப்தே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், கோவில்களில் உணவுப் பொட்டலங்கள் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உணவுப் பொட்டலங்களை வாங்க கூட்டம் கூடும் என்பதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் என, அவர் வாதாடினார்.
கோரிக்கை: இதையடுத்து, அறக்கட்டளை சார்பில், உணவுப் பொட்டலங்களை, பக்தர்களின் வீடு தேடிச் சென்று கொடுக்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.அதை ஏற்று, உணவுப் பொட்டலங்களை பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கொடுக்க, அமர்வு ஒப்புதல் அளித்தது.