பதிவு செய்த நாள்
21
ஏப்
2021
05:04
சென்னை :தமிழகத்தில், வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், நேற்று அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கும்பாபிஷேகம்: நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில், இரவு, 10:00 மணி வரை, வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் செந்தில்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஹிந்து, கிறிஸ்துவ, முஸ்லிம், ஜெயின், சீக்கிய மதத் தலைவர்களும் பங்கேற்றனர். கிறிஸ்துவ மதத் தலைவர்கள் பேசுகையில், ’ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம், பிரார்த்தனை கூட்டம் நடத்த, அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.முஸ்லிம் மதத் தலைவர்கள், ’ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை, மே, 9 ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று ஊரடங்கு தளர்வு அளிக்க வேண்டும்’ என,
வலியுறுத்தி உள்ளனர்.
ஒத்துழைப்பு: ஒட்டுமொத்தமாக, அனைத்து மதத் தலைவர்களும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசு சில கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டம் குறித்து, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் கூறியதாவது:அரசு விதிக்கும் நடைமுறைகளுக்கு, முஸ்லிம் சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என, உறுதி அளித்து உள்ளோம். ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை, ஞாயிற்றுக்கிழமை வருவதால், அரசு அனுமதி அளித்தால், அன்று தொழுகை நடத்துவோம். இல்லையேல், ஒரு நாள் முன், பின் நடத்துவது குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.