பதிவு செய்த நாள்
23
ஏப்
2021
10:04
திருச்சூர்: கேரளாவில் பிரசித்தி பெற்ற, திருச்சூர் பூரம் திருவிழா இன்று நடக்கிறது. கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், பூரம் நட்சத்திர நாளில், திருச்சூர் பூரம் விழா நடக்கிறது.
இன்று கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எளிமையான முறையில், சம்பிரதாய சடங்காக, இந்த விழா நடக்கிறது. இதன் முன்னோட்டமாக, நேற்று வடக்குநாதர் கோவிலின் தெற்கு கோபுர நடை திறக்கப்பட்டு, நெய்தலைக்காவு பகவதி அம்மன், யானை மீது எழுந்தருளினார். விழாவின் முக்கிய அம்சமான, திருவம்பாடி மற்றும் பாறமேக்காவு கோவில் யானைகளின் அணிவகுப்பு மற்றும் குடைமாற்றும் நிகழ்ச்சி, இம்முறை நடக்காது. ஆனால், இரவில் இவ்விரு கோவில்களின் சார்பில், வாண வேடிக்கை நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், திருச்சூர் நகரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க முடியும்.