பதிவு செய்த நாள்
24
ஏப்
2021
06:04
அரூர்: அரூரில் உள்ள, வர்ணீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் பழமையான வர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட இக்கோவில், தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: போரில் ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமன், அயோத்திக்கு செல்லும் வழியில், இக்கோவில் அருகில் உள்ள வர்ணதீர்த்தம் என்ற குளத்தில் நீராடி விட்டு, தீர்த்தமலைக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. இக்கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டில் விரிசல் ஏற்பட்டு மிகவும், சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், கோவில் அருகில் கழிவு நீர் தேங்கி யுள்ளதுடன், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீர், இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.