திருப்புவனம் : கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் பலரும் கோயில் வாசலிலேயே தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்தனர்.கோயில் பூட்டப்பட்டிருந்ததால் வாசலில் விளக்கேற்றி கோபுரத்தை வணங்கி சென்றனர்.வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கும் பக்தர்கள் அதன்பின் புஷ்வனேஸ்வரர் கோயிலில் மோட்ச விளக்கேற்றி வழிபடுவார்கள். கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் பலரும் வாசலிலேயே மோட்ச விளக்கை ஏற்றி விட்டு கோபுரத்தை வணங்கி சென்றனர். மடப்புரம் பூஜை பொருள் விற்பனை செய்யும் சீனிவாசன் கூறுகையில்; மடப்புரம் கோயிலை நம்பி 100க்கும் மேற்பட்டோர் எலுமிச்சை மாலை, தேங்காய், பழம் உள்ளிட்டவை விற்பனை செய்து வருகிறோம்,கோயில் திறக்கப்படாததால் பக்தர்கள் பொருட்கள் வாங்காமல் கோபுரத்தை மட்டும் வணங்கி செல்கின்றனர். வியாபாரமின்றி வறுமையில் உள்ளோம்,என்றார்.