பதிவு செய்த நாள்
28
ஏப்
2021
12:04
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக கோயில்களில் பக்தர்கள் இன்றி, சித்திரை திருவிழாவில் பவுர்ணமியை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் கோயில்களில் சித்திரை திருவிழாவில் சித்ரா பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்படும்.இவ்வாண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் இன்றி, அழகன்கோயில்சந்தான கோபாலகிருஷ்ணன் கோயிலில் பெருமாள் கள்ளழகர் வேட மிட்டு வைகை ஆறு போல அமைக்கப்பட்ட தீர்த்தத்தில் குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வாசுகி, ஸ்ரீதரன், நிர்வாகிகள் செய்தனர். ராமநாதபுரம் முத்தாலம்மன் கோயிலில் பெருமாள் சன்னதியில் கள்ளழகர் அலங்காரத்தில் குதிரைவாகனத்தில் பெருமாள் அருள்புரிந்தார்.
பக்தர்கள்தரிசனத்திற்கு அனுமதிக்கப் படவில்லை.பரமக்குடி-பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமாளின் சடாரி (திருப்பாதம்) வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார்.இக்கோயிலில் ஏப்., 22ல் உற்ஸவர், மூலவருக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.கோயில் வளாகத்திலேயே விழா நடத்தப்பட்டது. ஏப்.,26ல் பெருமாள், கருப்பண்ண சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.பின்னர் மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் சடாரி (திருப்பாதம்) புறப்பாடாகி, கருப்பண்ணசுவாமி வாசலில் தீபாராதனை நடந்தது.
டிரஷ்டிகள், கோயில் ஊழியர்கள் மட்டும் வைகையாற்றில் இறங்கி, ஆற்று மணலெடுத்து தீபாராதனை காண்பிக்க கோயிலை அடைந்தனர்.கோயிலில் வைகை ஆற்று மணல் குதிரை வாகன காலடியில் சேர்க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து குறைவான பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். இரவு பெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.