பக்தர் ஒருவர் ஆன்மிகப் பணிகளில் ஈடுபட விரும்ப மாட்டார். காரணம் கேட்டால் ‘நான் சாதாரணமானவன், என்னால் என்ன செய்து விட முடியும்?’’ என்பார். ஒருமுறை அவர் மகாபெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்திருந்தார். அப்போதும் தன்னைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டார். புன்முறுவல் பூத்த மகாபெரியவர், ‘சிவக்கொழுந்துவின் தம்பியை விட சாமான்யமானவர் என்று யாரைச் சொல்ல முடியும்? அவரே ஆன்மிப்பணி செய்து வியக்க வைத்தாரே? முயற்சியும், பக்தியும் இருந்தால் யாரும் சாதிக்கலாம்!` என்றார். ‘யார் அந்தச் சிவக்கொழுந்துவின் தம்பி, அவர் செய்த பணிதான் என்ன?’ என்று கூடியிருந்த பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். பெரியவரும் நடந்ததைச் சொல்லத் தொடங்கினார். ‘‘அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர் சிவக்கொழுந்து. அவருக்கு தம்பி ஒருவர். படிக்காத இளைஞரான அவர் கும்பகோணம் சங்கர மடத்திற்குத் தெற்கில் உள்ள காஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அப்போது அக்கோயிலில் கோபுரம் கட்டப்படவில்லை. கோபுரம் இல்லையே என்ற வருத்தம் அவருக்கு அதிகம் இருந்தது. ஒருநாள் இரவு கோபுரம் கட்ட நாம் ஏன் முயற்சிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றவே, மறுநாள் காலையில் நீராடி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டார். கோயிலுக்கு முன்பு ஒரு நாற்காலியை வைத்து அதில் ஒரு செம்பை வைத்தார். கண்களை மூடியபடி, ‘சிவதருமம் சிவதருமம் கோபுரம் கட்ட சிவதருமம்’ என ஜபித்தபடி மணிக்கணக்கில் நின்றார். இப்படியே ஒவ்வொரு நாளும் கடந்தது. அவரது ஆத்மார்த்த பக்தியைக் கண்ட ஊரார் காணிக்கை கொடுத்து வந்தனர். ஆறு ஆண்டுகள் முடிந்தன. என்ன ஆச்சரியம்! பெரும் பணம் சேர்ந்து விட்டது. கோயில் நிர்வாகத்தை அணுகினார் அந்த இளைஞர். பணத்தை ஒப்படைத்து வசூலித்த விதத்தையும் தெரிவித்தார். மனம் உருகிய அவர்கள் தங்களின் பணத்தையும் சேர்த்து திருப்பணியை உடனடியாகத் தொடங்கினர். அழகான கோபுரம் கட்டி முடிந்து கும்பாபிேஷகம் நடந்தது. காஹஸ்தீஸ்வரர் கோயில் கோபுரம் உருவானது இப்படித்தான். நம்பிக்கையோடு செய்த சிவ ஜபத்தால் சாதாரண இளைஞன் செய்த சிவத்தொண்டு இது. சாமான்யமான மனிதர்களும் முயற்சி செய்தால் ஆன்மிகத்தில் சாதனை படைக்க முடியும்’’ என்றார்.