பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 66வது நாண்மங்கல விழா, பேரூர் திருமடத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார். சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் நாண்மங்கல விழாவையொட்டி, வேள்வி வழிபாடுகள், சாந்தலிங்கப் பெருமான் திருமஞ்சனம், சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு புனித நீராட்டு ஆகிய வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து, சாந்தலிங்க மருதாசல அடிகளார் குரு மூர்த்தங்களில் வழிபாடு செய்து, கொலுக்காட்சியில் எழுந்தருளினார். பேரூர் ஆதினத்திடம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து, முன்னாள் மாணவர் சங்கர் எழுதிய,உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன் எனும் நூலை, பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் வெளியிட, சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.