சிறுவன் ஒருவன் வீட்டில் பட்டுப்புழு வளர்த்தான். தன்னைச் சுற்றிலும் பட்டு நுாலால் கூட்டைக்கட்டி உள்ளே புழு வசித்தது. பட்டுப்பூச்சியாக மாறி வெளியே வரும் முயற்சியில் இருந்தது அந்த புழு. கூட்டிலிருந்து வெளியில் வருவது என்பது எளிதான ஒரு விஷயம் அல்ல. பலமணி நேரம் பொறுமை, விடாமுயற்சியுடன் போராடி தான் வெளியே வர வேண்டும். ஆனால் அதுவரை அந்த சிறுவனால் பொறுக்க முடியவில்லை. பட்டாம் பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. கூரிய கத்தியால் மெதுவாக கூட்டை வெட்டி பூச்சியை சுலபமாக வெளியே எடுத்து விட்டான். ஆனால் அது பறக்க முடியாமல் தத்தளித்தது. அதன் உடல் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்தது. முடிவாக அந்த பூச்சி இறக்கவே, எறும்புகளுக்கு உணவானது. அதை கவனித்த சிறுவனின் தந்தை, ‘‘ராஜா... அந்தப் பூச்சி கூட்டிலிருந்து வெளியில் வருவதற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அதன் தசை, நரம்புகளை பலப்படுத்தும். பல மணி நேர போராட்டத்தால் அதன் உடல் வற்றி எடை குறையும். அதுவே அது பறப்பதற்கு உதவியாக அமையும். பூச்சி தானாகவே முயற்சித்து வெளியே வந்திருந்தால் பரிபூரண வளர்ச்சி பெற்றிருக்கும். உன் அவசர புத்தியால் அதன் வாழ்க்கை பாழாகி விட்டது’’ என்றார். நீடிய பொறுமைக்கு வெகுமதியாக அனைத்தையும் இரட்டிப்பாக ஆண்டவர் அளி்ப்பார்.