பதிவு செய்த நாள்
14
ஜூன்
2012
10:06
நெய்வேலி: நெய்வேலி வட்டம் 8ல் உள்ள சாரதாம்பாள்கோவில் கும்பாபிஷேகத்தை, சிருங்கேரி மடத்தின், 36வது பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்ய பாரதி தீர்த்த மகா சுவாமிகள், நடத்தி வைத்தார். சிருங்கேரி மடம் சாரதாம்பாள் பக்த சமாஜம் சார்பில், கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரம், வட்டம் 8ல், சாராதாம்பாள்கோவில் கட்டி முடித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வுகள், கடந்த, 11ம் தேதி காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 12ம் தேதி, நவக்கிரகக் ஹோமங்கள், வாஸ்து ஹோமங்கள், மூல மந்திர ஜபம் நடந்தது.
நேற்று காலை, சந்திர மவுலீஸ்வர பூஜைகளுடன், அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. காலை, 11 மணியளவில், சிருங்கேரி மடத்தின், 36வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய பாரதி தீர்த்த மகா சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். என்.எல்.சி., சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, நெய்வேலி ஸ்ரீசிருங்கேரி சாரதாம்பாள் பக்த சமாஜத்தின், விஜய யாத்திரை மற்றும் கும்பாபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.