வானில் ஷவ்வால் பிறை தெரிந்ததும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். அதிகாலை தொழுகையை முடித்து புத்தாடை அணிந்து ‘சதக்கத்துல் பித்ர்’ எனும் காணிக்கையை ஏழைகளுக்கு கொடுத்து விட்டு தொழுகை மேற்கொள்வர் .ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு இறைவன் இரண்டு நன்மைகளை வழங்குவான். நோன்பு திறக்கும் போது நோன்பாளியின் அனைத்து பிரார்த்தனையும் ஏற்கப்படும். மரணத்திற்கு பின் இறைவனை சந்திக்கும் நேரத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். ஒருமுறை ரம்ஜான் நாளில் இரு சிறுமியர் இசையுடன் பாடிக் கொண்டிருந்தனர். பொழுதுபோக்கும் விதமாக இசைப்பது கூடாது என தோழர் அபூபக்கர் அவர்களைத் தடுத்தார். உடனே நாயகம், ‘‘சிறுமியர் பாடட்டும்! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உண்டு. இன்று ஈகைத்திருநாள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என்றார். வீர விளையாட்டுக்களை விளையாடவும், அவற்றை ரசிக்கவும் அனுமதித்தார். ஆகவே கொண்டாட்டத்துடன் கூடிய மகிழ்ச்சித் திருநாளாக ரம்ஜான் உள்ளது. கொரோனாவால் நாடெங்கும் மக்கள் சிரமத்திற்கு உள்ளான நிலையில் இதில் இருந்து மீள தொழுகை நடத்துவோம்.