சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜன., 23 அன்று கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது.
விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியா விடையுடன் சொர்ணகாளீஸ்வரர், மற்றொரு தேரில் சொர்ணவல்லி அம்பாள், சிறிய சப்பரத்தில் விநாயகர், அங்குச தேவர் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
காலை 10:45 மணிக்கு தேர் தடத்தில் சிதறு தேங்காய் உடைத்து, பக்தர்கள் அனைவரும் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் உட்பட ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து, மதியம் 12:05 மணிக்கு நிலையை அடைந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் தலைமையில் கோயில் ஸ்தானிகம் ரத்தின காளீஸ்வர குருக்கள் சிறப்பு பூஜைகளை செய்தார்.
பத்தாம் நாளான இன்று காலை யாகசாலை பூஜையும், சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். இரவு 7:00 மணிக்கு தைப்பூச உற்ஸவம் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் தைப்பூச விழா நிறைவுபெறுகிறது.