பதிவு செய்த நாள்
18
மே
2021
05:05
ஈரோடு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு மாவட்டத்தில், அனைத்து கோவில்களும் அடைக்கப்பட்டு, கால பூஜை மட்டும் நடக்கிறது. அதேசமயம் கோவில்களில் அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளது.
புதியதாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், ஆதரவற்றவர்களுக்கு, கோவில் அன்னதான உணவை வழங்க உத்தரவிட்டது. இதன்படி ஈரோடு பெரியமாரியம்மன் கோவில், கபாலீஸ்வரர், திண்டல் வேலாயுதசாமி, பூங்கா ஆஞ்சநேயர், கொங்கலம்மன் கோவில்களின் அன்னதான உணவு, ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கோவில்களில் தனித்தனியாக சமைத்து எடுத்து செல்வதால் தாமதம் ஏற்பட்டது. இதை தவிர்க்க, ஐந்து கோவில்களின் அன்னதான உணவும், கொங்கலம்மன் கோவில் சமையல் கூடத்தில் தயாரிக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து உணவு சமைத்து, பார்சல் கட்டி, வேனில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் சமைப்பதால், கால தாமதம் ஏற்படாமல், பகல், 12:00 மணிக்கே உணவு வழங்கப்பட்டு விடுவதாக, அறநிலையத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.