கோயில் நிதியில் கடன் மோசடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2021 12:05
மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார் அருகே பிடாம்பட்டி சஞ்சீவிராயர் கோயில் டெபாசிட் அடிப்படையில் ரூ.45 லட்சம் வங்கிக் கடன் பெற்று மோசடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில் போலீசார் விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பிடாம்பட்டி வரதராஜன் தாக்கல் செய்த மனு: குளத்துார் அருகே பிடாம்பட்டியில் சஞ்சீவிராயர் கோயில் உள்ளது. இதற்குச் சொந்தமான நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியது. கோயிலுக்கு ரூ.1.5 கோடிஇழப்பீடு வழங்கியது. இதில் குறிப்பிட்ட தொகை பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. திருச்சியில் ஒரு வங்கியில் 7 தனித்தனி கணக்குகளில் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.70 லட்சம்டெபாசிட் செய்யப்பட்டது. அங்கு சிலர் போலி ஆவணங்கள் மூலம் டெபாசிட் அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் பெற்று கையாடல் செய்துள்ளனர்.
அறநிலையத்துறை கமிஷனர், இணைக் கமிஷனர்,திருச்சி எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வரதராஜன் குறிப்பிட்டார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.வங்கித் தரப்பு,மனுதாரரின் குற்றச்சாட்டிற்கும், வங்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, என தெரிவித்தது.நீதிபதி உத்தரவு: குற்றச்சாட்டுக்களை இந்நீதிமன்றம் கடுமையானதாக கருதுகிறது. மனுதாரர் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் போலீசில் புதிதாக புகார் அளிக்க வேண்டும். உடனடியாக வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்க வேண்டும். இதை புதுக்கோட்டை எஸ்.பி.,கண்காணிக்க வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இறுதி அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.