முருகன் வேல் எனும் ஆயுதத்தை கையில் தாங்கியுள்ளார். இதனால் தான் அவர் ‘வேலாயுதம்’ எனப்பட்டார். இது அவரது அன்னை பார்வதியால் தரப்பட்டது. ‘ஒரு அம்மா தன் பிள்ளைக்கு இப்படி ஒரு ஆபத்தான ஆயுதத்தை கொடுத்து பிறரைக் கொல்ல ஏவலாமா..’ என்ற கேள்வி சிலரது மனதில் எழும். ஆனால் சில சமயங்களில் தர்மத்தை நிலைநாட்ட அது அவசியமாகிறது. ‘வேல்’ மிகவும் சக்தி வாய்ந்தது. சக்தியின்றி உடலில் உயிர் நிலைக்காது. தாயே தன் குழந்தைக்கு சக்தி தருபவள். அவள் தன் குழந்தையை தைரியத்துடன் வளர்க்க வேண்டும். ‘வீரன் ஒருமுறை சாகிறான். கோழை தினமும் சாகிறான்’ என்ற விவேகானந்தரின் வாக்குப்படி அவள் தன் குழந்தைக்கு வீரத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதை வேல் தத்துவம் காட்டுகிறது. அதனால் தான் பக்தர்கள் முருகனை வணங்கும்போது ‘வெற்றி வேல்! வீர வேல்!’ என்கிறார்கள்