கந்தபுராணத்தை இயற்றியவர் கச்சியப்பசிவாச்சாரியார். இந்நுாலில் முருகனின் வரலாறு முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. உற்பத்திக்காண்டம், அசுரகாண்டம், மகேந்திரகாண்டம், யுத்தகாண்டம், தேவகாண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு பகுதிகள் உள்ளன. 10 ஆயிரத்து 345 செய்யுள்களைக் கொண்டது. முதலடியாகிய ‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்னும் முதல்வரியை காஞ்சி குமரக்கோட்டத்தில் உள்ள முருகனே அடியெடுத்துக் கொடுத்த பெருமையுடையது. இக்கோயிலில்தான் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கம்பராமாயணம் மாணிக்கம் என்றால், கந்தபுராணம் நல்ல வேலைப்பாடுடன் இழைக்கப்பட்ட மாணிக்கம் என்று பரிதிமாற்கலைஞர் குறிப்பிடுகிறார்.