திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கபிலர் குன்றை சுற்றியிருந்த முள்மரங்கள் பொதுப்பணித்துறை மூலம் அகற்றப்பட்டது.
பாரியின் உற்ற நண்பன் கபிலன். சங்க இலக்கியங்களில் அதிக பாடல்களை பாடியவர். நட்பிற்கு அடையாளமானவர். பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவிலூர் அழைத்துவந்து மணமுடித்து வைத்துவிட்டு தென்பெண்ணை ஆற்றில் இருக்கும் குன்றின்மீது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு. இதற்கான ஆதார கல்வெட்டுகளும் இதன் அருகில் இருக்கும் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறை சுவற்றில் உள்ளது. கபிலர் உயிர் நீத்த குன்றின்மீது அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு நினைவகம் உள்ளது. கபிலர்குன்று என அழைக்கப்படும் இதுதான் திருக்கோவிலூரில் அடையாளமாகவும் உள்ளது.
தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் குன்றை சுற்றி முள் மரங்கள் வளர்ந்து, கபிலர் குன்றை மறைக்கும் அளவிற்கு இருந்தது. இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வந்தது. இந்த முள்மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ஏற்பாட்டில், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குணா ஆகியோர் மேற்பார்வையில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் முன்னின்று ஜே.சி.பி., மூலம் குன்றை சுற்றி இருந்த முள்மரங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும் வீரட்டானேஸ்வரர் கோவில் படித்துறையில் இருந்த முள் மரங்களும் அகற்றப்பட்டது. இங்குதான் கபிலருக்கு நினைவு தூனும் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருக்கோவிலூரில் அடையாளமாக இருந்த கபிலர் குன்று வெகு தூரத்திலிருந்து அனைவரும் காணும் வகையில் காட்சியளிக்கிறது. சீரமைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.