பதிவு செய்த நாள்
31
மே
2021
03:05
டேராடூன்:“கும்பமேளாவால் தான், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதாக கூறுவது நியாயமற்றது,” என, உத்தரகண்ட் மாநில மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் கஞ்சியால் கூறியுள்ளார். உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
கொரோனா அச்சம்: கடந்த மாதம் கோலாகலமாக துவங்கிய கும்ப மேளா திருவிழா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலே முடித்து வைக்கப்பட்டது. மாநிலத்தில் வைரஸ் வேகமாக பரவியதற்கு கும்ப மேளாவே காரணம் என, பல தரப்பினரும் குற்றம்சாட்டினர்.இந்நிலையில், கும்பமேளாவுக்காக அப்போது நியமிக்கப்பட்ட போலீஸ் ஐ.ஜி., சஞ்சய் கஞ்சியால் கூறியதாவது: கும்பமேளாவால் தான், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதாக பலரும் கூறி வருகின்றனர். அவ்வாறு கூறுவது நியாயமற்றது. கும்பமேளா நடந்த ஹரித்துவார் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை, கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளின் தரவுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதை செய்து பார்த்தால், உண்மையை நம்மால் உணர முடியும். இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில், ஹரித்துவார் மாவட்டத்தில், 8.91 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.பாதுகாப்புஅதில், 1,954 பேர் மட்டுமே வைரசால் பாதிக்கப் பட்டனர். இது வெறும் 0.2 சதவீதமே. இதேபோல், அந்த நேரத்தில், கும்பமேளாவுக்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 16 ஆயிரம் போலீசாரில், 88 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது வெறும் 0.5 சதவீதமே. எனவே, வைரஸ் பரவலுக்கு கும்பமேளா காரணம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.