பதிவு செய்த நாள்
01
ஜூன்
2021
02:06
திருச்சி, : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன், நான்கு கால் மண்டபத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை, ராஜகோபுரம் முன் உள்ள நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.மற்ற நாட்களில், அந்த மண்டபம் கடைகள் நடத்த, வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்து. அங்கு வியாபாரம் செய்தவர்கள், கோவில் நிர்வாக விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனால், கடைகளை காலி செய்யுமாறு, கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
வியாபாரிகள் காலி செய்யாமல், காலம் தாழ்த்தினர். கோவில் நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடைகளை, மே 30க்குள் காலி செய்ய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், கடைகளை காலி செய்யாததால், நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, மண்டபத்தை சுற்றிலும், இரும்பு கம்பியால் தடுப்பு அமைக்கப்பட்டு, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.