தமிழகக் கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த ஜீயர் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2021 03:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றுபவர்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை, மளிகை பொருட்கள் வழங்குவதை வரவேற்கிறோம். மகிழ்ச்சி தெரிவிக்கிறோம். தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இதில் அர்ச்சகர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும், பல ஆயிரம் கிராம கோவில் பூசாரிகளுக்கும், பூஜைகள் செய்பவர்களுக்கும் இதேபோல் நிதியுதவி வழங்க வேண்டும் என்பதை கோரிக்கையாக தெரிவிக்கிறோம். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து கோயில்களிடம் ஒப்படைப்பது போல், தமிழகத்திலும் கோவில் சொத்துக்களின் உண்மை நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட சொத்துக்களை அந்தந்த கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும். கொரோனா நோய்தொற்று ஒழிப்பதற்காக தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் ஒரே நாளில் சிறப்பு யாகங்கள், பூஜைகள் செய்ய வேண்டும். -என்றார்.