பதிவு செய்த நாள்
05
ஜூன்
2021
03:06
சென்னை :அறநிலையத் துறை ஆவணங்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு, நேற்று துவக்கி வைத்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறையில், பல்வேறு நலத்திட்டங்கள், சீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதில், இத்துறையின் பழமையான ஆவணங்கள், கோப்புகளை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டமும் ஒன்றாகும்.
அவசியம்: அதன்படி, சென்னை, நுங்கம்பாக்கம், அறநிலையத் துறை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பழமையான கோப்புகளை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் திட்டத்தை, துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். அறநிலையத் துறை கோவில்களின் நிர்வாகங்கள், திருப்பணிகள்,நிலங்கள் குத்தகை உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்டு, அரசு, கமிஷனர் அளவில், உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அவற்றுக்கான கோப்புகள், பதிவறையில் பாதுகாத்து வரப்படுகின்றன. இதில், நீண்ட கால கோப்புகளை, டிஜிட்டல் முறையில், படி எடுத்து பாதுகாப்பது அவசியமானது.
விரிவுபடுத்தப்படும்: இத்திட்டத்தின் கீழ், நிலையான கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும், டிஜிட்டல் முறையில் பாதுகாக்கும் பணிகள், நேற்று துவங்கின.இதன் வாயிலாக, பழமையான கோப்புகளை, காலப்போக்கில் சிதிலமடையாமல் காக்க முடியும். மேலும், சார்நிலை அலுவலகங்களில் உள்ள நீண்ட கால கோப்புகளை பாதுகாக்க, படிப்படியாக இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. துவக்க நிகழ்ச்சியில், அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் ரமணசரஸ்வதி பங்கேற்றனர்.