கோயில்களின் நில உரிமை ஆவணங்கள்: இணையதளத்தில் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2021 11:06
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அதன் விவரங்களை பார்த்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்களை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் நிலம் மென்பொருளோடு ஒப்பீடு செய்து முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் பகுதி அளவு ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் முதல்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் அ பதிவேடு நகர நில அளவை பதிவேடு சிட்டா போன்றவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள கோவில் நிலங்களில் 72 சதவீதம், அதாவது மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த இணையதளத்தில் திருக்கோவில் நிலங்கள் என்ற தலைப்பை தேர்வு செய்து அதன்பின் பட்டியலிட்டுள்ள கோவிலை தேர்வு செய்ததும் கோவில்களுக்கு சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும். அதன் விவரங்களை பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.