குடிப்பவர்களில் பலரை கேட்டால், ‘‘என் மனதில் தீராத கவலை ஏற்பட்டுள்ளது. அதை மறக்கவே குடிக்கிறேன்’’ என்பார்கள். இன்று பண வசதி காரணமாக குடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களிடம் ‘ஏன் குடிக்கிறீர்கள்’ என்றால் ‘சந்தோஷத்தைக் கொண்டாட குடிக்கிறோம், டென்ஷனைக் குறைக்க குடிக்கிறோம்’ என்பார்கள். ஒரு கொண்டாட்டம் வந்து விட்டால், எது இருக்கிறதோ இல்லையோ, குடி இருக்கிறது. குடிப்பவர்கள் சொல்லும் இந்த காரணங்கள் அனைத்துமே தற்காலிக சந்தோஷத்தை தரலாம். ஆனால் இவர்கள் இறுதியில் மருத்துவமனைக்குத்தான் செல்கிறார்கள். ‘குடல் போச்சு. இதயம் போச்சு. சிறுநீரகம் போச்சு’ என்று கதறுகிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் மற்றவர்கள் குடிக்கிறார்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் சிரமத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். ‘மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை (இருதயம்) ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்’ என்கிறது பைபிள். ஆம்.. சம்பாதிப்பதில் பெரும் பகுதியை, நன்மைக்காக செலவிடுங்கள். ஏழைகளை கைதுாக்கி விடுங்கள். இதுவே உண்மையான மகிழ்ச்சி.