பதிவு செய்த நாள்
12
ஜூன்
2021
05:06
கதக் : கடவுள் மீதுள்ள ஆழமான பக்தியால், கதக்கின் ராவல் மல்லிக் கிராமத்தினர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கின்றனர்.
கதக் நகர் முளகுந்தின் தாவல் மல்லிக் கிராம மக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட, சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆனால் கிராமத்தினருக்கு, தடுப்பூசி மீது நம்பிக்கையில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால், இறந்து விடுவோம் என, அஞ்சுகின்றனர். சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் கிராமத்துக்கு வந்து, கொரோனா தடுப்பூசி பற்றி சந்தேகம் வேண்டாம். தைரியமாக தடுப்பூசி பெறுங்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மன்றாடியும் கிராமத்தினர் மறுக்கின்றனர். அதிகாரிகள் இதுவரை மூன்று முறை, கிராமத்துக்கு சென்றும், யாரும் தடுப்பூசி பெற முன்வரவில்லை.
தடுப்பூசி பெற்றால், இறந்துவிடுவர் என பீதி உள்ளது. எங்களுடன் கடவுள் இருக்கிறார். எங்களுக்கு ஒன்றும் ஆகாது. எங்கள் கிராமத்துக்குள், கொரோனா நுழையாது. ஒருவேளை நுழைந்தாலும், சாகடிக்க முடியாது. கடவுள் எங்களை காப்பாற்றுவார். தடுப்பூசி தேவையில்லை என முரண்டு பிடிக்கின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் கூட, 25 ஆயிரம் ரூபாய் பாண்ட் பத்திரத்தில், எழுதித்தாருங்கள். தடுப்பூசி பெறுகிறோம் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். கிராமத்தினருக்கும், வியாபாரிகளுக்கும் தடுப்பூசி போடுவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. முளகுந்த் ஆரம்ப சுகாதார மையத்தின், மருத்துவ அதிகாரி கூறுகையில், கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆனால், ராவல் மல்லிக் கிராமத்தினர் மட்டும், தடுப்பூசி பெற முன்வரவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய தவறான கற்பனை உள்ளது. விரைவில் இவர்களின் மனதை மாற்றுவோம் என்றார்.