சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்திஜி தலைமையில் சுதந்திரப் போர் எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என நாமக்கல் கவிஞர் சுதந்திரப் போராட்டம் குறித்துப் பாடல் இயற்றினார். நம் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என ஓயாமல் பிரார்த்தித்து வந்த காஞ்சி மகாபெரியவருக்கு, காந்திஜியின் மீது அன்பிருந்தது. காந்திஜியும் மகாபெரியவரைப் பெரிதும் மதித்து வாழ்ந்தார். இருவரும் சந்தித்து உரையாடிய சம்பவமும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அம்சமாக கதராடை அணிதல் என்பது காந்திஜியால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுதேசி துணிகளை அணிவதன் மூலமாக இந்திய நெசவாளிகள் பயன் அடைவார்கள் எனக் கருதி காந்திஜி கதராடை அணிவதை வற்புறுத்தினார். சுதந்திர போராட்டத் தியாகிகள் பலரும் அவரவரே நுால் நுாற்றுக் கதராடை அணியத் தொடங்கினர். நம் நாட்டின் பழமையான தொழில்களில் ஒன்றான நுாற்புத் தொழில் வளரவும், நெசவாளிகள் வளம் பெறவும் கதராடை உடுத்துவதே சிறந்தது என காஞ்சி மகாபெரியவரும் முடிவெடுத்தார். தம்மிடம் வந்த பக்தர்கள் எல்லோரையும் மில் துணிகளை நீக்கிவிட்டுக் கதர்த்துணி அணியும்படி வற்புறுத்தினார். சொல் ஒன்று செயல் வேறொன்று என வாழாதவர் மகாபெரியவர். தாம் சொன்னவற்றையே தம் வாழ்நாளில் முழுமையாகக் கடைப்பிடித்தவர். 1918ம் ஆண்டில் இருந்து அவர் கதராடையே அணியத் தொடங்கினார். அது மட்டுமல்ல, ஸ்ரீமடத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கதர் தான் அணிய வேண்டும் எனக் கட்டளையிட்டார். முரட்டுத் துணியான கதரை அணிய அனைவரும் முடிவு செய்தனர். அப்போது நாடெங்கும் ஒரு வழக்கம் இருந்தது. கதர் அணியத் தொடங்குபவர்கள், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய அன்னிய நாட்டு மில் துணிகளை நெருப்பில் இட்டு எரித்து விடுவர். இப்படி நாடெங்கும் மில் துணிகள் குவியல் குவியலாக நெருப்புக்கு இரையாக்கப்பட்டன. காஞ்சிபுரம் மடத்தில் பணிபுரிபவர்களுக்காக மதுரையில் இருந்து கதர் ஆடைகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் இரண்டு ஜோடிக் கதர் ஆடைகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே தங்களிடம் உள்ள மில் துணிகள், அன்னிய நாட்டுத் துணிகளை நெருப்பிலிட்டு எரித்து விடலாமா என மகாபெரியவரிடம் பணிவோடு கேட்டனர் மடத்தில் பணிபுரியும் அன்பர்கள். சிந்தனையில் ஆழ்ந்த மகாபெரியவருக்கு துணிகளை நெருப்பிலிடுவதும் ஒருவகை வன்முறைதான் எனத் தோன்றியது. மில் துணிகளை அகிம்சை முறையில் நீக்க வேண்டும் எனக் கருதினார். தனுஷ்கோடியில் சமுத்திர ஸ்நானம் செய்து மில் துணிகளைக் கடலில் வீசி விட்டு, பின் கதர்த்துணிகளை அணியுமாறு தெரிவித்தார். அதன்படியே பணியாளர்களும் தங்களிடம் இருந்த மில் துணிகளை கடலில் வீசிய பின் கதராடையை உடுத்த ஆரம்பித்தனர்.